Categories: Devotional Songs

சிவபுராணம் – விளக்கம் | sivapuranam meaning porul vilakkam

இந்த ஆன்மீக பதிவில் (சிவபுராணம் – விளக்கம்) – Sivapuranam Full Lyrics and Meaning in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சிவபுராணம் – விளக்கம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

(திருவாசகம் ‍- திருப்பெருந்துறை)

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

பொருள்:

நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.

கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.

திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.

தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.

ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

குறிப்பு:

1. மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது. சிவம் வாழ்க என்று கூடத் துவங்காமல் வணக்கத்திற்குரிய நம முதலில் கூறி இறைவனின் சிவ என்ற திருநாமத்தைச் சொல்வது

அவருடைய பணிவன்பின் வெளிப்படை.

2. திருவாசகத்தில் சிறப்பிடம் பெறுவது ஆகமம். இம்முதற் பதிகத்திலேயே அதனைப் போற்றி நிற்பது அவருக்கு ஆகமங்கள் பால் உள்ள பெருமதிப்பைக் காட்டுவன. வேதங்கள் இறைவனுடைய இயல்பு கூறுகின்ற போது,ஆகமங்கள் அப்பெருமானை எவ்வகைஅடையலாம் என்பது பற்றி நமக்குக் காட்டுகின்றன. வேதங்கள் அறிவானால் ஆகமங்கள் அந்த அறிவின் பயன்பாடு. இவ்வாறு ஆகமங்கள் நமக்கு இறைவனின் அருகில் செல்லும் வழி காட்டுவதாலும், ஆகமங்கள் இறைவனால் அருளிச்செய்யப்பட்டதாலும் இறைவனை, “ஆகம நெறி தந்து அருகில் வரச் செய்கின்ற வள்ளல்” எனப் போற்றுகின்றார்.

3. இறைவன் ஒருவனே. (ஏகம் சத் – வேதம், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் – திருமந்திரம்). அவ்விறைவன் பசுக்களாகிய நாம் உய்வுறும் பொருட்டு பலபல வேடங்கள் தாங்கி நம்மை ஆட்கொள்கிறான்.

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

பொருள்:

என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும்.

பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும்.தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள) பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும்.

கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும்.

தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும்

பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.

குறிப்பு:

1. வேகம் கெடுத்தல் – துயரம் நீக்குதலைக் குறிக்கும். மனத்தின் வேகத்தையும்

(நிலையில்லாமல் அலைபாய்தல்) அதனால் வரும் கேட்டின் வேகத்தையும் குறைத்து

தன் பால் மனத்தை நிலைபெறச்செய்யும் ஈசனின் கருணையையும் குறிக்கும்.

2. பிஞ்ஞகன் – பீலி அணிந்தவன் எனவும் பொருள் கொள்ளலாம்.

(இறைவன் குரண்டாசுரனின் பீலியை அணிந்த விபரம் கந்த புராணம் ததீசி முனிவர் வாக்கில் காண்க.)

3. சேயோன் – சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன்.

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

பொருள்:

எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி.

எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.

ஒளி வடிவானவனின் திருவடி போற்றி.

சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி.

அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி.

மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி.

அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.

குறிப்பு:

1. தேசு – ஒளி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை

முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20

பொருள்:

அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள்.

சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால்

அவனுடைய திருவருளே துணையாகக்கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை

முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.

குறிப்பு:

1. “சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”

என்ற இவ்வரிகள் அன்பினால் நிறை நிற்கின்ற அடியவர்க்கு மட்டுமல்லாது தத்துவம்

விரும்புவோருக்கும் பெரும்பொருள் வாய்ந்தது. திருவாசகத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் கருத்து,

“இறைவன் தானே வந்து ஆட்கொள்கிறான்.” கட்டுண்டு தவிக்கும் பசுக்களாகிய நம் எல்லா

உயிர்களின் பொருட்டு அரியவனாகிய இறைவன் எளிமையாக நிற்பது சித்தாந்தத்தில் காண்க.

அவ்வாறு எளிமையாக வந்திருக்கும் இறைவனைத் தொழுவதற்கும் அப்பெருமானுடைய அருளையே

துணையாகக் கொண்டாலேயே அது முடியும்.

(அருளே துணையாக … அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – சம்பந்தர்)

கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி

எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,

எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்

பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் 25

பொருள்:

நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன்.

சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று,

வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும்,

அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே ! – உன் பெரிய பெரிய தன்மைகளை மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்.

குறிப்பு:

1. பாசத்தால் கட்டுண்ட பசுக்களின் உய்வின் பொருட்டு இறைவனால் நுண்ணுடலும்

(சூக்ஷ்ம சரீரம்) அவற்றின் வினைக்கேற்ற (பரு) உடல்கள் பின்னும் அருளப்பட்டன

என்பது சித்தாந்தம் கூறும் உலகின் துவக்கம்.

2. நுதல் – நெற்றி; இறைஞ்சி – வணங்கி; இறந்து – கடந்து; புகழும் ஆறு – புகழும் வகை.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் 30

பொருள்:

புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,

பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,

கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும்

இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று

எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே!

குறிப்பு:

1. விருகம் – மிருகம்; தாவர சங்கமம் – (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம்.

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

பொருள்:

உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேன்.

நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும் ஒலியாய் எழுந்த

உண்மைப் பொருளே ! காளையை ஓட்டி வருபவனே ! வேதங்கள்

“ஐயா !” எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் பலபல தன்மைகளைப் பெருகி

ஆராய்ந்தும் காண முயலுகின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே !

குறிப்பு:

1. இறைவனுடைய பெருமையை அறிந்து அவருடைய திருநாமகளில் மூழ்கியிருப்போருக்கு

இங்கேயே வீடுபேறு – வேதம்.

2. வேதங்கள் பலவாறெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்தும், பலபல கோணங்களில் கூறியும்

அவர் தம் பெருமையைக் கூறச் சொற்கள் இல்லாமையை உணர்த்துகின்றன. அத்தகு பெரிய

அவரோ மிகச்சிறியவற்றிலும் நிறைந்துள்ளார். என்ன விந்தை இது ?!

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி

மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

பொருள்
:

வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே.என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே ! பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து,

உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே !

எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே !

அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே !

குறிப்பு:

1. சுடர் மிகுவதால் இருளுக்குக் கேடு – பசவண்ணர்.

உள்ளத்தில் மெய்ச்சுடரான இறைவன் வர பொய்யிருளுக்குக் கேடு.

2. வெய்ய – காய்கின்ற/ சூடான; தணிய – குளுமையான.

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

பொருள்:

தோற்றம், குறித்த வயது, முடிவு இல்லாதவனே ! நீ உலகங்களையெல்லாம்

தோற்றுவிக்கின்றாய், தொடர்ந்து (அழியாது) இருக்கச் செய்கின்றாய்,

(இறுதியில்) அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக் கொள்கின்றாய்,

உயிர்களை மாயைக்குள் போக்குவாய் ! நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய்.

மணத்தினும் (வாசனை) நுண்மையான (சூச்க்ஷ்சுமமான) பொருளே !

வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே !

சொல்லிற்கும் சிந்தனைக்கும் எட்டாது நிற்கும் மறை நாயகனே !

குறிப்பு:

1. இறைவனுக்கு பிறவற்றைப் போலத் தோற்றம், வாழ்வு, முடிவு இல்லாமையைக் குறிப்பிட்டு,

அப்பெருமானே மற்ற எல்லாப் பொருள்களுக்கும் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

என்ற ஐந்தொழில்கள் மூலம் இயங்கச்செய்கிறார் என்னும் திறத்தை வெளிப்படுத்துகிறார்.

2. ஒப். உன்றன் அடியார் நடுவுற்றிருக்கும் அருளைப் புரிவாய்.

3. மணமானது காண இயலாத நுண்பொருள்களாகப் பரவுகின்றது.

இறைவன் அந்த நுண்மையினும் நுண்மையாக இருக்கிறார்.

4. சேய்மை – தொலைவு; நணியது – அருகில் இருப்பது; மாற்றம் – சொல்.

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை

பொருள்:

அப்போது கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ

அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று,

இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே !

ஐந்நிறமும் நீயே ஆனாய் ! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக

மறைந்திருந்தாய், எம்பெருமானே !

குறிப்பு:

1. வினை நிறைந்த பிறப்பினால் அவதிப்படும் ஆன்மாக்களில் அன்பினால் இறைவன்

திருவடி பற்றுபவர்களுக்குக் கடினமான முறைகளினால் அல்ல, மிகவும் எளிதாகவும் தேனினும்

இனிய ஊற்றாக அவர்கள் உள்ளத்தில் தோன்றி அவர்களுடைய பாச மலம் அறுக்கிறார் சிவபெருமான்.

மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி

புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, ⁠55

பொருள்:

கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னை

மறைத்து மூடிய மாயையாகிய இருளினை

செய்யத்தகுந்தது, செய்யத் தகாதது என்னும் விதிகளால் கட்டி,

மேலே ஒரு தோலும் சுற்றி, கெட்டுப் போவதாகவும்,

அழுக்கினை உடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து,

மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான இவ்வுடலை வைத்துக்கொண்டு

மயங்கிநிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற,

குறிப்பு:

1. உடலின் கட்டுமானம் விவரிக்கப் படுகிறது.

விலங்கு மனத்தால், விமலா உனக்கு

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

பொருள்:

ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம்

கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற

நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய என்க்கும் அருள்செய்து,

இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையால் வந்து,

உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி,

நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப்

பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனான தத்துவப் பொருளே !

குறிப்பு:

1. கேவலமான நிலையில் நாம் இருப்பினும் இறைவன் திருவருள் நம்முடைய

இழிவு கண்டு புறம் தள்ளாது, அளத்தலுக்கு இயலாத கருணையினால் நம்மை

ஆண்டு கொண்டருளும் வண்ணம் இங்கு தொழப் படுகின்றது.

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

பொருள்:

குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே !

ஒளியுருவினனே ! தேன் நிறைந்த அமுதமே ! சிவபுரத்தை உடையவனே !

பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே !

இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய,

என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே !

குறிப்பு:

1. இறைவன் உயிர்கள் பால் அவரவர் தன்மைக்கு ஏற்ப அறக்கருணை, மறக்கருணை

காட்டி நல் வழிப்படுத்துகிறார். மணிவாசகப் பெருமான், சிவபெருமான் தமக்கு அறக்கருணை

புரிவதன் மூலமே நெஞ்சின் வஞ்சமெல்லாம் அகல வழிவகை செய்துவிட்ட வகையைப் போற்றுகின்றார்.

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

பொருள்:

தெவிட்டாத அமுதமே ! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே !

ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே !

(என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே !

இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே ! உள் நிற்பவனே !

குறிப்பு:

1. இறைவன் எல்லாருடைய உள்ளத்திலும் உள்ளார். எங்கும் நிறைந்தும் அதே நேரத்தில்

எல்லாம் கடந்தும் இருப்பதால் அவரைக் கடவுள் என்கிறோம். ஆயினும் ஆர்வமும் முயற்சியும்

உடையவர்கள் சிவபெருமான் திருவருளினால் அவரை உணர்கின்றார்கள். மற்றவர்கள் அலைவரிசை

ஒன்றியையாத ஒலிப்பெட்டி போல அவர் மிக அருகில் இருந்தும், பேரொளியாக இருந்தும்

காண இயலாதவர்களாக உள்ளனர்.

(ஒ. பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாகக் கொள்வானே – திருமூலர்)

2. இறைவனுடைய எண்குணங்களில் ஒன்று வரம்பில் இன்பமுடைமை. அவ்வாறு இருக்க

“இன்பமும் துன்பமும் இல்லானே” எனக் கூறுவது பொருந்துமா எனக் கேட்டால்,

இறைவனுக்குப் பிறவற்றால் எவ்வித இன்பமோ துன்பமோ இல்லை.

செம்பொருளாக உள்ள அது தன்னுடைய வற்றாத இன்பத்தில் தானே என்றும் மகிழ்ந்து இருக்கும்.

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே

பொருள்:

அன்பினால் தன்னைத் தொழும் அடியார்களுக்கு அன்பே உருவாயவனே !

எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே !

சுடருருக்கொண்டவனே ! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே !

பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே !

முதலாக இருப்பவனே ! இறுதியாகவும் இடைப்பட்ட நிலையாகவும்

ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே !

(காந்தம் போல) என்னை ஈர்த்து என்னை ஆளாக –

அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும் தலைவனே !

உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின் துணையாகக் உணர்கின்ற பெரியோர்களுடைய சிந்தையின்

பார்வை வியத்தற்கு உரிய பார்வை ! அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே !

குறிப்பு:

1. சிவபெருமான் எல்லாப் பொருள்களுடனும் கலந்து தோன்றினும் இவை எதுவும் அவரல்ல.

அவர் கலந்து இருப்பது போலவே எல்லாம் கடந்தும் உள்ளார்.

2. சிவபெருமானுக்கு அவதாரம் இல்லை. அவர் பிறப்பது இல்லை.

3. இறைவன் அன்பர்களுக்கு எளியவனாகக் காட்சி அளித்த போதிலும்,

அவருடைய பேரியல்பு யாராலும் முழுதும் ஆய்வது பற்றி எண்ணியும் பார்க்க இயலாதது.

எனவே தான் அவருடைய இயல்பினை சற்றேனும் காண முயல்கின்ற ஞானிகளின் திறனை

வியந்து கூறுகின்றார் மாணிக்க வாசகர்.

(ஒ. பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறியாமை விளம்புகின்றேனே – திருமந்திரம்)

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள்:

நீங்குவதும், புதிதாக வருவதும், கலப்பதும் இல்லாத புண்ணிய மூர்த்தியே !

என்னைக் காக்கின்ற காவல் தெய்வமே ! காண்பதற்கு அரியதாக ஒளி மிகுந்து இருப்பவனே !

தொடர்ச்சியாகவும் முறையாகவும் வருகின்ற இன்ப வெள்ளமே ! தந்தையே ! மிகுதியாக நின்ற

ஒளி வீசும் சுடரான தோற்றத்தினனாய், சொல்லப்படாத பூடகமான நுண் உணர்வாக இருந்து

குறிப்பு:

1. இறைவன் எங்கும் நிறைந்து இருக்கும் பொழுது அவர் எதனை நீங்குவார்,

புதிதாக வருவதற்கு அவர் இல்லாத்தது என்ன உள்ளது, அவர் கலந்து இல்லாத

பொருள் தான் ஏது – புதிதாகக் கலப்பதற்கு ? இவ்வாறு எல்லாப் பொருளிலும் இருந்த போதிலும்,

பொருளின் தன்மையால் குறைபடாமல் தான் என்றும் தூயவனான புண்ணிய மூர்த்தியாகவே உள்ளார்.

2. இறைவன் சொற்களால் சொல்லி முடியாதவர். நுண் உணர்வால் அறியப் படுபவர்.

(ஒ. அவனருளே கண் கொண்டு காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்

இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே – தேவாரம் )

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப

ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

பொருள்:

இவ்வுலகில் பல்வேறு விதங்களில் கூறப்பட்டு, மெய்யறிவாக ஆகும்

(ஆய்வின் இறுதியில் சாறாகத் தேறும்) தேற்றமே !

அந்தத் தேற்றத்தின் பயனான தெளிவே ! என்னுடைய சிந்தனையினுள்

உண்பதற்க்கு மிகவும் அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுத ஊற்றே !

என்னை உடைமையாக ஆள்பவனே !

பலவேறு விகாரங்களை உடைய ஊனால் (சதையால்) ஆன இவ்வுடம்பின் உள்ளே கட்டுண்டு கிடக்க

இயலவில்லை, எம் தலைவா ! அரனே ! ஓ ! என்று பலவாறு

குறிப்பு:

1. ஒ. ஏகம் சத் விப்ரா பஹ¤தா வதந்தி – வேதம்.

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்

மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே

தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

பொருள்:

போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஒழிய உண்மையே ஆன அடியவர்கள்

மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவியில் சிக்குறாது

மாயையால் ஆன இவ்வுடலின் கட்டுமானத்தை அழிக்க வல்லானே !

வேறு எதுவுமற்றதாகிய இருளில் கூத்து ஆடுகின்ற நாதனே !

தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆடுபவனே ! தென்பாண்டி நாட்டை உடையவனே !

குறிப்பு:

1. இருள் என்பது (ஒளீ) இன்மையைக் குறிக்கும். உலகங்கள் எல்லாம் ஒடுங்கிய

பின்னர் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்நிலை ஏதுமற்ற இருள் போன்றது.

அவ்விருளில் ஒளியாக இறைவன் ஆடுகின்றார்.

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

பொருள்:

அல்லல் நிறைந்த பிறவியை நீக்குவானே ! ஓ ! என்று சொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, (இறைவன்) திருவடியை பணிந்து அதன் கீழிருந்து சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள், பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும். இவற்றால் இறைவனே இடைவிடாது துதிப்பவர் சிவபுரத்துச் செல்வர் என்பதும், இச்சிவபுராணத்தை ஓதுவார்க்கு வரும் பயனும் கூறப்பட்டன.

குறிப்பு:

1. பொருளினை உணர்ந்து சொல்லுவதன் மூலம் உணர்வினோடு ஒருமைப்பட்டுத்

தொழுதலால் அவ்வகை வணக்கத்தின் பெருமை வலியுறுத்தப்படுகின்றது.

திருச்சிற்றம்பலம்.

(sivapuranam meaning porul vilakkam) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song. You can also save this post சிவபுராணம் – விளக்கம் or bookmark it. Share it with your friends…

Share
Tags: Sivan Songs

Recent Posts

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்

Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…

4 months ago

வா ரயில் விட போலாமா | Vaa Rayil Vida Polaama Song Lyrics in Tamil

Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

4 months ago

Vaa Rayil Vida Polaama Song Lyrics from Pariyerum Perumal

Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

4 months ago

மகா சிவராத்திரிக்கு சிவனடியார் வழிபாடு

மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…

4 months ago

சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல் | tamil pathikams to be recited all four seasons throughout shivaratri day

இந்த ஆன்மீக பதிவில் (சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்) - List of…

4 months ago

முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் | Mudhal nee mudivum nee lyrics tamil

முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் ===================== பாடலாசிரியர் : தாமரை பாடகர்கள் : சித் ஶ்ரீராம் &…

4 months ago