இந்த ஆன்மீக பதிவில் (வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி பாடல் விளக்கம்) – Vetragi Vinnagi Nindrai Potri Lyrics and meaning in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி பாடல் விளக்கம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொழிப்புரை :
விண்ணாகியும் வேறு பூதங்களாகியும் நிலை பெற்றிருப்பவனே ! அடியேனை வேற்றிடத்துக்குத் திரும்பிச் செல்லாதபடி அடிமையாகக் கொண்டவனே ! இன்ப ஊற்றாகி உயிர் அறிவினுள்ளே நிலைபெற்றிருப்பவனே ! இடையறாத சொற்களின் ஒலியே ! சக்தியாகி ஐம்பூதங்களிலும் நான்கு வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் இருப்பவனே ! காற்றாகி எங்கும் கலந்தவனே ! கயிலை மலையில் உறைபவனே ! உனக்கு வணக்கங்கள் பல .
குறிப்புரை :
` போற்றி ` என்பதுபற்றி ஐந்தாம் திருப்பதிகக் குறிப்பின் தொடக்கத்தில் சில கூறப்பட்டன . ` வேறு ` என்னும் உரிச்சொல் ` வேற்று ` எனத் திரிந்து பெயராய் நின்று , வேறாய பொருள்களை யுணர்த்திற்று . ` விண் ` எனப் பின்னர் வருகின்றமையின் , ` வேற்றாகி ` என்றருளிச் செய்தார் ; ` விண்ணாகியும் பிற நான்கு பூதங்களாகியும் நின்றவனே ` என்பது பொருள் . ` நின்றாய் ` முதலியன , ` நின்றான் ` முதலிய பெயர்கள் விளியேற்று நின்றனவாம் . அவற்றின் பின்னெல்லாம் , ` நினக்கு ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . ` என்னை மீளாமே ஆளாக் கொண்டாய் ` என்க . ஊற்று , இன்ப ஊற்று . உள்ளே ஒளித்தாய் – ` புறக் கண்ணிற்குப் புலனாகாது உயிரறிவினுள் நின்றவனே ` என , சுவேதாசுவதரமும் கூறிற்று . ஓவாத சத்தம் – இடையறாத ஓசை . ஒலி – எழுத்து . எழுத்துகளைப் புலப்படுத்தும் ஓசை இடையறாது நிகழ்ந்த வழியே பொருள் புலப்படுமாகலின் ,` ஓவாத சத்தத்து ஓலியே ` என்றருளிச் செய்தார் . இனி , ` சத்தத்து ` என்னும் அத்து வேண்டாவழிச் சாரியை எனக் கொண்டு , ` அழியாத சத்தமாகிய ஒலியே ( எழுத்தே )` என்றுரைத்தலுமாம் . ஓவாமை – அழியாமை . வடமொழியாளர் , எழுத்தினை , ` அட்சரம் ` ( அழிவில்லாதது ) என்பர் . எழுத்தின் இயல்பு . ` ஓசை யொலியெலாம் ` என்னும் திருத்தாண்டகக் குறிப்பிற் கூறப்பட்டது . ( ப .38 பா .1). ஆற்று – ஆற்றல் ( சத்தி ); முதனிலைத் தொழிற் பெயர் ; அங்கே – விண் முதலிய பூதங்களிலும் , உள்ளத்திலும் , ஒளியிலும் , ஆறங்க நால்வேதங்களிலும் என்க . இது , ` நின்றவாறு ` முதலியவற்றை விளக்கியருளியது , ` காற்றாகி ` என்பதில் , ` ஆகி ` என்பது , ` போன்று ` எனப் பொருள் தந்தது . இஃது அங்கே அமர்ந்தமையை உவமையின் வைத்து விளக்கியவாறு .
============
பாடல் எண் : 2
பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொழிப்புரை :
பேய்களோடு கூத்தாடுதலை உகந்தவனே ! பிறவியைப் போக்கும் தலைவனே ! உயிர்களைப் பல வகையான பிறப்புக்களில் நிறுத்தி விளையாடுதலில் வல்லவனே ! விரும்பி என் உள்ளத்துப் புகுந்தவனே ! பொய்யைச் சார்பாகக் கொண்ட முப்புரங்களை அழித்தவனே ! என் சிந்தையை விடுத்துப் போகாது இருப்பவனே ! பாம்பைக் கச்சாக அணிந்தவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .
குறிப்புரை :
பிச்சாடல் – பித்தாடல் ; வேண்டியவாறே நடித்தல் ( பலவகை நடனங்களையும் செய்தல் ). உகந்தாய் – விரும்பினவனே . ` பேயோடு பிச்சாடல் உகந்தாய் ` என்க . பிச்சாடல் பேயோடு உகந்தமை போல , பிறவியறுத்தலும் சிவ பிரானுக்ககே உரிய சிறப்பியல்பாதல் அறிக . வைச்சு ( வைத்து ) – உயிர்களைப் பலவகையான பிறப்புக்களில் நிறுத்தி . ஆடல் – அவை செயற்படுதலை . நன்று மகிழ்ந்தாய் – மிகவும் மகிழ்ச்சியோடு காண்கின்றவனே ; ` மகிழ்ச்சி ` என்றது , அறியாமை நோக்கி நகைத்தலை . மருவி – அணுகி . பொய்ச்சார் ( பொய்த்தார் ) – நின்னிடத்துக் கொண்ட அன்பினை விட்டவர் . சிந்தையில் மருவினமைக்கும் , மருவி நீங்காது நின்றமைக்கும் வேறு வேறாக வணக்கங் கூறியருளினார் என்க .
============
பாடல் எண் : 3
மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொழிப்புரை :
பகைவர் மும்மதில்களையும் அழித்து , விரும்பி என் உள்ளத்துப் புகுந்து , என்னை உருவமுடையவனாகப் படைத்து , என் உயிர் உடம்பின் வழிப்படாதபடி நீக்கி நின் வழிப்படுத்து எனக்கு இன்பமாகிநின்ற செயலுடையவனாய் , உலகத்தாரால் முன்னின்று துதிக்கப்படுபவனாய் , கருவாய்க்கப் பெற்றுச் சஞ்சரிக்கும் காளமேகம் போல் உலகுக்கு நலன் தருவானாய் , உள்ள கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .
குறிப்புரை :
மருவார் – பொருந்தாதார் ; பகைவர் . உருவாகி – உருவ முடையவனாய் நின்று ; இனி , ` ஆக ` என்பது , ` ஆகி ` எனத் திரிந்து நின்றது எனலுமாம் . உள் ஆவி – உடம்பினுள்ளே இருக்கும் உயிர் ; உள்ளிருத்தல் , நுண்ணிதாய் நிறைந்து நிற்றல் . வாங்கி ஒளித்தாய் – பிரித்தெடுத்து மறைத்தாய் ; என்றது , உயிரை உடம்பின் வழிப்பட்டுச் செல்லாது நீங்கி , நின் வழிப்படுத்தினாய் என்றபடி . திரு – இன்பம் . தேசம் – உலகம் . ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு ( தி .5. ப .91. பா .3.) ஞாலத்தாரும் தொழுதலின் , ` தேசம் , பரவப்படுவாய் ` என்றருளிச் செய்தார் . கருவாகி – கருவாய்க்கப் பெற்று ; நீரை உண்டு .
============
பாடல் எண் : 4
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொழிப்புரை :
தேவர் போற்றும் அமுதமாய் , வந்து என் உள்ளம் புகுந்தவனாய் , உயிர்களின் குறையைப் போக்கும் அருள் உருவம் உடையவனாய் , ஓங்கித் தீப்பிழம்பாய் உயர்ந்தவனாய் , தேனை வடித்த தெளிவு போல்பவனாய் , தேவர்களுக்கும் தேவனாய் , சுடுகாட்டுத் தீயில் கூத்தாடுதலை விரும்பியவனாய் உள்ள கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .
குறிப்புரை :
மருந்து – அமுதம் . ஊனம் – குறை . உடலே – திரு மேனியை உடையவனே ; இறைவனது திருமேனி உயிர்களின் குறையை நீக்கும் அருளுருவமாதல் , ` வேகியானாற்போல் செய்த வினையினை வீட்டல் ஓரார் `, ` மூன்றும் நம்தம் – கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே ` என்பவற்றால் ( சிவஞான சித்தி . சூ . 1.50,55.) விளங்கும் . அழலாய் நிமிர்ந்தது , அயன் மால்கட்கு . ` ஓங்கி நிமிர்ந்தாய் ` என்பது ஒரு பொருட் பன்மொழி . தேனதனை என்பது தேனத்தை என மருவி நின்றது . அது , பகுதிப் பொருள் விகுதி . வார்த்த – வடித்த . தெளிவே – தெளிவு போன்றவனே , ` வார்த்தை ` என்னும் பெயரெச்சம் , ` தெளிவு ` என்னும் செயப்படுபொருட் பெயர் கொண்டது . ` தேவர்க்கும் ` என்னும் உம்மை சிறப்பு . கானம் – காடு . ஈமக்காடு .
============
பாடல் எண் : 5
ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொழிப்புரை :
ஊர்களாகவும் உலகமாவும் பரவியவனே ! அனற் பிழம்பாய் ஓங்கி உயர்ந்தவனே ! புகழ் வடிவினனாய் எங்கும் பரவியவனே ! நீங்காது என் உள்ளத்தில் புகுந்தவனே ! நீர் நிறைந்த ஓடைபோலக் குளிர்ச்சி தருபவனே ! ஒப்பற்றவனே ! கார்முகில் போல அருளவல்லவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .
குறிப்புரை :
ஊராகி – பல ஊர்கள் வடிவமாகி . பேர் ( பெயர் ) – புகழ் . ` புகழ் வடிவில் எங்கும் பரவினாய் ` என்றருளியதாம் ; நீராவி – நீரினின்றும் வெப்பத்தால் எழுகிற ஆவி . ` நீரின் கண் ஆவியாயும் நிழலாயும் உள்ளவனே ` என்க . நீரினுள் நிழலாவது , நீர்வாழ் உயிர் முதலியவற்றின் நிழல் ; இது பிரிந்து தோன்றாது நீரினுள் கலந்தே நிற்பது . ` நீர் நிழல் போல் இல்லா அருவாகி நின்றானை ` ( சிவஞான போத ம் சூ . 8. அதி . 2.) என்னும் வெண்பாவையும் , அதன் உரையையும் நோக்குக . நேர்வார் – நிகராவார் . காராகி நின்ற – கருமை நிறம் பெற்று நின்று .
============
பாடல் எண் : 6
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி யுலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொழிப்புரை :
முதற்கண் சில வேறு தேவர்களாய் நின்று அருள் வழங்கிப் பின் அத்தேவர்களும் நீ ஒருவனேயாகி ஒன்றி நின்றவனே ! தேவர்களும் அறிய முடியாத பெரிய தேவனே ! புல்லாகிய ஓரறிவு உயிருக்கும் வாழ்க்கை வழங்கியவனே ! நீங்காது என் உள்ளத்துப் புகுந்தவனே ! உலகுகள் தோறும் பல உயிர்களாக நிற்பவனே ! உலகைப் பற்றி அதனைக் கைவிடாதவனே ! கல்லின் கண்ணும் உள்ள உயிர்களாய் நிற்கும் ஒளிப்பொருளே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .
குறிப்புரை :
சில் உருவாய்ச் சென்று – முதற்கண் சிலவேறு தேவர்களாய் வேறுவேறு அருளை வழங்கி நடந்து . திரண்டாய் , பின்னர் அத்துணைத் தேவர்களும் நீ ஒருவனேயாய் ஒன்றி நின்றவனே . ` அத்தேவர்களாலும் அறியப்படாத தேவனே ` என்க . சிவபிரான் இவ்வாறு நிற்கும் நிலையை ,` அறிவினால் மிக்க அறுவகைச் சமயத் தவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து ` ( தி . 7. ப .55. பா .9.) எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் , ` மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் – தேற்றனே தேற்றத் தெளிவே ` ( தி .8 திருவா . சிவபுரா . 81. 82.) என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தமை காண்க . புல் உயிர் – புல்லாகிய உயிர் ; இதுவே உயிர்களுட்கடைப் பட்டதாதலை , ` புல்லும் மரனும் ஓரறி வினவே ` ( தொல் . பொருள் – 583) எனவும் , ` புல்லாகிப் பூடாய் ` ( தி .8 திருவா . சிவபு .26) எனவும் , வந்தனவற்றால் அறிக . பூட்சி – பூண ( மேற்கொள்ள ) ப்படுவது ; வாழ்க்கை ; அது , தனு கரண புவன போகங்களையும் , இன்ப, துன்பங்களையும் , யான் எனது என்பனவற்றையும் கொண்டு நிற்றல் . ` பார் ` என்றது , ` உலகம் ` என்னும் பொருளது , அதனைப் பற்றுதலும் , விடாமையும் அருள் காரணமாக என்க . கல் உயிர் – கல்லின் கண் உள்ள உயிர் ; கல்லின் கண்ணும் உயிர்கள் உள்ளன என்பது , தேரை காணப்படுதல்பற்றி அறியப்படும் ; எனவே , ` கல்லாய் மனிதராய் ` ( தி .8 திருவா . சிவபு -28) என்பதிலும் , ` கல் ` என்னும் பெயர் அதன்கண் உள்ள உயிர்மேல் நின்றமை பெறப்படும் . ` கனலே ` என்றது , ` ஒளிப் பொருளே ` என்றவாறு . இவ்வாறு அருளிச் செய்தது , கல்லினுள்ளும் கதிரவன் ஒளி , ஊடு சென்று ஆங்கு நுண்ணுயிர்களைக் காத்தல் பற்றி யென்க .
============
பாடல் எண் : 7
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொழிப்புரை :
பண்ணின் இசையாகி இருப்பவனே ! உன்னைத் தியானிப்பவரின் பாவத்தைப் போக்குபவனே ! எண்ணும் எழுத்தும் சொல்லும் ஆனவனே ! என் உள்ளத்தை நீங்காத தலைவனே ! விண்ணும் தீயும் நிலனும் ஆகியவனே ! மேலார்க்கும் மேலாயவனே ! கண்ணின் மணி போன்ற அருமையானவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .
குறிப்புரை :
பண் , ஏழிசைகளது கூட்டத்தானே பிறத்தலின் , பண் பருப்பொருளும் , இசை நுண்பொருளுமாம் ; அதனால் , ` பண்ணின் இசையாகி நின்றாய் ` என்றருளிச் செய்தார் . பாவிப்பார் – நினைப்பார் – எண் , அளவை ; ` எழுத்துச் சொல்லும் ` என உம்மையை மாறிக் கூட்டுக . எழுத்தும் சொல்லும் மொழியின் பகுதிகள் . விண் முதலிய மூன்றனைக் கூறவே , ஏனைய இரண்டுங் கொள்ளப்படும் . மேலவர் – தேவர் . கண்ணினிடத்து உயிராய் நின்று காட்சியை விளைப்பது கருமணியே யாதலின் . ` கண்ணின் மணியாகி நின்றாய் ` என்றருளினார் .
============
பாடல் எண் : 8
இமையா துயிரா திருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
ஊழியே ழான வொருவா போற்றி
அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொழிப்புரை :
ஏனைய உயிர்களைப் போல இமைக்காமல் மூச்சு விடாமல் இருப்பவனே ! என் உள்ளத்தை நீங்காத தலைவனே ! பார்வதி பாகனே ! பல ஊழிகளையும் கடந்தவனே ! பொருந்தாத கொடிய விடத்தை உண்டவனே ! முதற் பழையோனே ! பொறுமையாகச் செயற்படும் ஞான ஒளி உடையவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .
குறிப்புரை :
இமைத்தல் , உயிர்த்தல் முதலியன உடம்பொடு கூடியே விளங்குவதாகிய உயிரின் செயல்களாதலின் , ` இமையாது உயிராது இருந்தாய் ` என்றது , ` தானே விளங்கும் இயல்புடைய கடவுளே ` என்றவாறாம் . ` ஏழ் ` என்றது , ` பல ` என்றவாறு . அமையா – உடம்பொடு பொருந்தாது அதற்குப் பகையாய் நிற்கும் . ஆர்ந்தாய் – உண்டவனே . ஆதி புராணன் – முதற் பழையோன் ; தன்னிற் பழையோர் இல்லாதவன் என்றவாறு ; ` முதல்வனும் பழையவனுமாய் நின்றவனே ` என்றுரைத்தலும் ஆம் . கமை – பொறுமை ; அருள் ; கனல் போலும் திருமேனியுடைமைபற்றி , ` கனலே ` என்பார் , ` அருளுடைய தொரு கனலே ` என வியந்தருளிச் செய்தார் .
============
பாடல் எண் : 9
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொழிப்புரை :
மூத்தலோ பிறத்தலோ இறத்தலோ இல்லாது எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டு என்றும் இயற்கையாகவே விளங்கும் தேவர் தலைவரும் தொழும் தெய்வமே ! எங்கும் பரவி யிருப்பவனே ! ஐயோ ! என்று வருந்தும் அடியேனுக்கு எல்லாமாய் இருக்கும் பெருமானே ! கனகத்திரள் போல்பவனே ! கயிலை மலையானே ! அடியேன் துயரங்கள் வருத்த வருந்துகின்றேன் . என்னைக் காப்பாயாக . உனக்கு வணக்கங்கள் பல .
குறிப்புரை :
மூவாய் – மூப்படையாதவனே ; என்றது , ` காலத்தால் தாக்குண்ணாதவன் ` என்றதாம் . பின்தோன்றுதலிற் பிரித்தலின் , ` முன்னமே ` என்னும் ஏகாரம் பிரிநிலை . ` எல்லாப் பொருட்கும் முன்னமே ` என்க . ` முளைத்துத் தோன்றினாய் ` என மாற்றி , ` உளனாய் விளங்கினாய் ` என்றுரைக்க . இயற்கையாகவே விளங்குபவனை , செயற்கையாக முளைத்தவன் போல அருளியது பான்மை வழக்கு . ` தே ` என்பது ` தெய்வங்கள் ` எனவும் , ` ஆதி தேவர் ` என்பது காரணக் கடவுளர் எனவும் பொருள் தரும் . ` தே ஆதிதேவர் ` என்றது செவ்வெண் . ` எங்கும் சென்று ஏறிப் பரந்தாய் ` என்க . ` சென்று ` என்றதும் , செல்லாததனைச் சென்றது போலக் கூறியதாம் . ஆவா , வியப்பிடைச் சொல் . ` அடியேனுக்கு எல்லாப் பொருளுமாய் இருப்பவனே ; ` ஆவாய் ` என்பது சொல்லெச்சம் . ` ஆவாய் அடியேனுக்கு எல்லாம் ` என்பதே பாடம் எனலுமாம் . சுவாமிகளுக்கு இறைவன் எல்லாம் ஆயினமையை , பின்வரும் ` அப்பன் நீ அம்மை நீ ` என்னும் திருத்தாண்டகத்தால் அறிக . நினக்கு அலந்தேனாகிய எனது வணக்கம் ` என்க . நலிய – வருத்த , அலந்தேன் – வருந்தினேன் ; ` காவாய் ` என்றதனை இறுதிக் கண் வைத்துரைக்க .
============
பாடல் எண் : 10
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியு மிகலிப் போற்றி
யங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொழிப்புரை :
பெரும்பரப்புடைய வானகத்திற்கு இருப்பிடமாய் , எப்பொருளின் நீள அகலங்களையும் தன்னுள் அடக்கியவனாய் , உன் அடியையும் , முடியையும் காண அரியும் , அயனும் தம்முள் மாறுபட்டு முயன்றும் அறிய முடியாமல் அனற் பிழம்பாய் நின்றவனாய்க் கொடிய வலிய கூற்றுவனை உதைத்தவனாய் , அடியேனுடைய உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டவனாய் , கொடிய இடியும் மின்னலும் ஆகியுள்ள கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .
குறிப்புரை :
` விசும்பொடு கூடிய கண் ` என்க . கண் – இடம் ; எப் பொருட்கும் இடந்தந்து நிற்றலே விசும்பின் செயலாகும் . நீள அகலம் உடையாய் – எப்பொருளின் நீள அகலங்களையும் நின்னுள் அடக்கியுள்ளவனே . இகலி – ( தம்முள் ) மாறுபட்டு ; தேடியவர் அரியும் அயனும் என்பது நன்கறியப்பட்டதாகலின் அவரைக் கூறாராயினார் . ` இகலிப் போற்றி ` என்பதன் பின்னுள்ள , ` போற்றி ` என்பதனை , ` நின்றாய் ` என்பதன் பின் வைத்துரைக்க . ` இகலிபோற்றி ` என்பதும் பாடம் . ஒன்று – சிறிது ; ஒன்றும் என்னும் முற்றும்மை தொகுத்தல் ஆயிற்று . அறியாமை – அறியாதபடி . வன் கூற்றம் – வலிய இயமன் . உரும் – இடி .
============
பாடல் எண் : 11
உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொழிப்புரை :
உண்ணாது உறங்காது இருப்பவனே ! வேதங்களை ஓதாது உணர்ந்தவனே ! உன்பெருமையை நினைத்துப் பார்க்காது செயற்பட்ட இராவணனைச் சிறிதளவு விரலை அழுத்தி நசுக்கி மகிழ்ந்து , அடக்கி ஆள்பவனே ! பின் அவன்பால் பண்ணோடு கூடிய இசையின் இனிமையைச் செவிமடுத்தவனே ! முன்னரேயே அடியேனுடைய உள்ளத்தில் புகுந்தவனே ! உலகுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .
குறிப்புரை :
` உண்ணாது உறங்காது இருந்தாய் ` என்பதற்கு , மேல் , ` இமையா துயிரா திருந்தாய் ` ( ப .55 பா .8) என்றதற்கு உரைத்தவாறு உரைக்க . ` ஓதாது உணர்ந்தாய் ` என்றது , ` இயற்கை உணர்வுடையவனே ` என்றவாறு , எண்ணா – மதியாத . ` இலங்கைக்கோன் தன்னை ` என்பதன் பின்னுள்ள போற்றி என்பதனை , ` ஈசா ` என்பதன் பின் வைத்துரைக்க . இறை வைத்த – சிறிது ஊன்றி . ` பின் உகந்தாய் ` என்க . பண் ஆர் இசை இன் சொல் – பண்ணாய் நிறைந்த இசையொடு கூடிய இனிய சொல் . ` உகந்தமைக்குக் காரணம் இது ` என்பார் , இதனை அருளிச் செய்தார் . உலகிற்குக் கண்ணாய் நிற்றலாவது , அது நடத்தற்கு நிமித்தமாய் நிற்றல் .
வேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் நின்றாய் போற்றி | திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகம் (ஆறாம் திருமுறை) திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
(vetragi vinnagi nindrai potri lyrics meaning tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல் வரிகள். You can also save this post வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி பாடல் விளக்கம் or bookmark it. Share it with your friends…